கன்னடம் தெரியாத கல்வி அமைச்சர் இலக்கியவாதி வீரபத்ரப்பா அதிருப்தி
கன்னடம் தெரியாத கல்வி அமைச்சர் இலக்கியவாதி வீரபத்ரப்பா அதிருப்தி
ADDED : ஜூன் 30, 2024 10:33 PM

பாகல்கோட்: ''கன்னடம் எழுத, படிக்க தெரியாத கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, அரசுக்கு கரும்புள்ளியாகும்,'' என பிரபல இலக்கியவாதி வீரபத்ரப்பா தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதற்காக, கன்னட பள்ளிகளை மூடும் தரித்திர சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆங்கில வழி பள்ளியில், கல்வி கற்றவர். இவருக்கு கன்னடம் எழுதவோ, படிக்கவோ தெரியாது. அவரது தலைமுடியை பார்த்தால் வருத்தமளிக்கிறது.
அவரது தந்தைக்கு கன்னடம் நன்றாக தெரியும். ஆனால், மது பங்காரப்பாவுக்கு ஒரு அமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்ற, பொது அறிவு இல்லை. இந்த அமைச்சரை மாற்ற வேண்டும். கன்னடம் எழுத, படிக்க தெரியாத கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, அரசுக்கு கரும்புள்ளியாகும்.
நமது அரசியல்வாதிகள், கன்னடத்தை காப்பாற்றுவது குறித்து பேசுகின்றனர். ஆனால் அவரது பிள்ளைகள், ஆங்கில வழி கல்வி கற்று, வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
கன்னடம் கற்றால் உணவுக்கு பிரச்னை இருக்காது என்பதற்கு, என் பிள்ளைகளே உதாரணம். என் மூன்று பிள்ளைகள் கன்னட வழி கல்வி கற்று, நல்ல பதவியில் உள்ளனர். ஒரு மகன் தாய், தந்தையை பார்த்து கொள்ளும் நோக்கில், ஊரிலேயே வியாபாரம் செய்கிறார்.
தாய், தந்தையை கவுரவிக்கும் குணத்தை, கன்னடம் கற்பிக்கிறது. முன்னாள் முதல்வர் குண்டுராவ், ஆங்கிலம் கற்க ஆசிரியரை வைத்து கொண்டும், அவரால் ஆங்கிலம் கற்க முடியவில்லை.
தமிழக, கேரள அரசியல்வாதிகள், அந்தந்த மொழிகளின் மாநாட்டில் தவறாமல் பங்கேற்கின்றனர். ஆனால் நமது மாநிலத்தில் மாநாடுகளுக்கு, அரசியல்வாதிகள் வருவது இல்லை. ஆங்கிலம் என்றால் டாலரை உருவாக்கும் மொழி மட்டுமே.
இவ்வாறு அவர் கூறினார்.