எட்டு வழிப்பறி கொள்ளையர் சிக்கினர்: 3 சங்கிலிகள் பறிமுதல்
எட்டு வழிப்பறி கொள்ளையர் சிக்கினர்: 3 சங்கிலிகள் பறிமுதல்
ADDED : செப் 13, 2024 10:12 PM
புதுடில்லி:டில்லி மற்றும் ஹரியானாவில் நான்கு பெண்கள் உட்பட 8 வழிப்பறிக் கொள்ளையரை டில்லி மாநகரப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 5ம் தேதி இசாபூர் மற்றும் தன்சா ஆகிய இடங்களில் அமைந்துள்ள புத்தர் கோவிலில் ஆண்டு திருவிழா நடந்தது.
அப்போது, 3 பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருடப்பட்டன. சங்கிலியை இழந்தோர் கொடுத்த புகார்படி மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், துவாரகாவில் பதுங்கி இருந்த வழிப்பறிக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ரதி ராம்,52, பூஜா,20, சுனிதா,37, மற்றும் ரோஷணி,30, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் பதுங்கி இருந்த நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு பேரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.
ரதி ராம் மீது திருட்டு, கள்ளச்சாராய விற்பனை மற்றும் கொலை முயற்சி உட்பட 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.