UPDATED : மே 04, 2024 11:25 PM
ADDED : மே 04, 2024 11:22 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரசார பாடலில் உரிய திருத்தங்கள் செய்ததால், தேர்தல் கமிஷன் அந்த பாடலை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இது தவிர, பஞ்சாப் மாநிலத்திலும் இந்த கட்சி ஆட்சி செய்கிறது.
இந்நிலையில், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஏற்கனவே இந்த வழக்கில், அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 23ம் தேதியும், பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதியும் தேர்தல் நடக்கஉள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் பழிவாங்கும் நோக்கில், தங்கள் கட்சி தலைவரை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சிறையில் அடைத்துள்ளதாக கூறி, ஆம் ஆத்மியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அக்கட்சி எம்.எல்.ஏ., திலீப் பாண்டே எழுதி, பாடிய இரண்டு நிமிடங்கள் உடைய பிரசார பாடலை சமீபத்தில் ஆம் ஆத்மி வெளியிட்டது.
'இது தேர்தல் நடத்தை விதிமீறல்' எனக்கூறி, பிரசார பாடலுக்கு தலைமை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் தடை விதித்ததாக ஆம் ஆத்மி கூறியது. ஆனால், இதை மாநில தேர்தல் கமிஷன் மறுத்தது. ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தடை விதிக்கவில்லை எனவும், அதில் சில மாறுதல்களை மட்டும் செய்யுமாறும் கூறியிருந்தது.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கியதுடன், சில திருத்தங்களையும் ஆம் ஆத்மி மேற்கொண்டது. இதன் காரணமாக, டில்லி தேர்தல் கமிஷன் அந்த பிரசார பாடலை பயன்படுத்த நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.