5 நாடுகளின் தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் பெலகாவியில் ஆய்வு
5 நாடுகளின் தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் பெலகாவியில் ஆய்வு
ADDED : மே 07, 2024 05:41 AM

பெலகாவி : உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து வரும் லோக்சபா தேர்தல் நடைமுறையை, ஐந்து நாடுகளின் தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள், பெலகாவியில் ஆய்வு செய்தது.
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. தற்போது, இந்தியாவில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.
கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதை ஆய்வு செய்வதற்காக, ஐந்து நாடுகளின் தேர்தல் கமிஷன் பிரதிநிதிகள் பெலகாவிக்கு நேற்று வந்தனர்.
இந்த குழுவில், கம்போடியா, மால்டோவா, நேபாளம், செஷல்ஸ், துனீசியா ஆகிய நாடுகளின் தலா இரண்டு பிரதிநிதிகள் என பத்து பேர் வந்து உள்ளனர்.
நகரின் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், பெலகாவி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான நிதேஷ் பாட்டீல், தேர்தல் நடைமுறைகள் குறித்தும், ஏற்பாடுகளும் குறித்தும் அவர்களிடம் விளக்கினார்.
பின், ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள், கண்காணிப்பு முறை, போக்குவரத்து வசதி, விழிப்புணர்வு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கினர். பின், ஊடக கட்டுப்பாடு அறைக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
இன்று நடக்கும் ஓட்டுப்பதிவையும் இவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.