ADDED : ஆக 20, 2024 11:43 PM
தங்கவயல் : தங்கவயல் நகராட்சியின் முதற் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவி காலம் இரண்டரை ஆண்டுகள். அப்போது தலைவர் பதவி பொது பிரிவுக்கும்; துணைத் தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் தலைவராக முனிசாமி, துணைத் தலைவராக தேவி பதவியில் இருந்தனர். இவர்களது பதவிக்காலம் 2023 மே மாதத்தில் முடிந்து போனது.
இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதால், சில நகராட்சிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கு விசாரணையில் இருந்ததால் இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லாமல் போனது.
நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை பிறப்பித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டதால் நகராட்சி, டவுன் சபைகளுக்கு தேர்தல் நடத்த அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, தங்கவயல் நகராட்சிக்கு நாளை ஆகஸ்ட் 22ல் தேர்தல் நடத்தவும், தலைவர் பதவி எஸ்.சி., பெண்., துணைத் தலைவர் பதவி பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவுக்கும் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9:00 முதல் 11:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. பிற்பகல் 1:00 மணிக்கு பரிசீலனை. போட்டி இருந்தால் பிற்பகலில் தேர்தல் நடக்கும்.
காங்கிரசில் மட்டுமே நகராட்சி தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தில், 'நாளை காலையில் வேட்பாளர் யார் என்பதை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அறிவிப்பார்' என முடிவு செய்யப்பட்டது.
கட்சிகள் பலம்
காங்கிரஸ் 14
பா.ஜ., -3
ம.ஜ.த., 1
இ.கு.க., 1
மா.,கம்யூ., -1
சுயேச்சைகள் -15
மொத்தம் 35