மோடி தொகுதியில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடு தமிழகத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தகவல்
மோடி தொகுதியில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடு தமிழகத்தை சேர்ந்த தேர்தல் அதிகாரி ராஜலிங்கம் தகவல்
ADDED : மே 28, 2024 08:46 PM

நாடு முழுதும் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட லோக்சபா தேர்தலின் இறுதிக் கட்ட தேர்தல் நெருங்கி விட்டது. ஏழாவது கட்ட தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கியுள்ளது. இங்கு வரும், 1ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ராஜலிங்கம், தென்காசி மாவட்டம் கடையநல்லுாரை சேர்ந்தவர். தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் மிகவும் பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியிலும், வி.வி.ஐ.பி., தொகுதியான வாரணாசியில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, 'தினமலர்' நாளிதழுக்கு ராஜலிங்கம் அளித்த பிரத்யேக பேட்டி:
ஓட்டுப் பதிவுக்கான அடிப்படை பணிகள், ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு வரவழைப்பது, எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதற்கு காரணம் இங்கு நிலவும் கடும் வெப்பம். அனல் காற்று வீசுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஓட்டுச் சாவடிகளில் நிழற்பந்தல் அமைத்துள்ளோம். குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சில மாதிரி ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதியுடன், குழந்தைகளை பாதுகாக்கவும் கூடுதல் வசதி செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் சற்று ஓய்வெடுக்க ஓட்டுச்சாவடி வளாகத்தில் இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்கள் தேர்தலுக்கு முதல்நாளே, அதற்குரிய பொருட்களுடன் ஓட்டுச்சாவடிக்கு சென்று விடுவர். இந்த முறை வெப்பம் அதிகம் என்பதால், அதை எதிர்கொள்ள 'மெடிக்கல் கிட்' தேர்தல் பணியாற்றும் அனைவருக்கும் வழங்கப்படும். அதில், முதலுதவி மருந்துகள் இருக்கும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடி மருத்துவம் செய்ய, நடமாடும் மருத்துவ குழுக்களும் ஆங்காங்கே தயாராக இருக்கும்.
பதட்டமான சாவடிகள்
பதட்டமான ஓட்டுச்சாவடிகளை ஆறு மாதத்துக்கு முன்பே கண்டறிந்துள்ளோம். அவற்றை பல பிரிவுகளாக பிரித்து, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களும், அரசியல் ரீதியான பதட்டம் ஏற்படும் இடங்களும் தனித்தனியாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். தேர்தல் பார்வையாளர்களோடு, மத்திய அரசு பணியாளர்களான ‛மைக்ரோ' அப்சர்வர்களும் இணைந்து கண்காணிப்பர்.
இந்தப் பணிகள் அனைத்தும், 'வெப் காஸ்டிங்' எனப்படும் இணையதளம் வாயிலாக வாயிலாக கண்காணிக்கப்படும். ஓட்டுச்சாவடிகளில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் என, சந்தேகிக்கப்படுபவர்கள், குற்றப்பின்னணி உடையவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதியின் கிராமங்களைச் சேர்ந்த, 25 சதவீதம் வாக்காளர்கள் பல ஆண்டுகளாக டில்லி, மும்பை போன்ற இடங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு வசிப்போரின் குடும்பத்தினர் இங்கு இருப்பதால் ஓட்டுப் போட கண்டிப்பாக வருவர். அவர்களை ஓட்டுப் போட வருமாறு, 'கால் சென்டர்' வாயிலாக பேசி அழைப்பு விடுத்துள்ளோம். வெளியூர்களில் இருந்து வாரணாசியில் தங்கியிருப்போரும் அதிகம்.
எனவே, எல்லோரையும் வரவழைத்து, அதுவும் அதிக வெப்பம் நிலவும் நேரத்தில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பது மிகவும் சவாலான விஷயம். இருப்பினும் வெற்றிகரமாக அந்தப் பிரச்னைகளை எதிர்கொண்டு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் ஓட்டுப் பதிவு நடக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- - - நமது நிருபர் -