சமூக ஊடகங்கள் தீவிர கண்காணிப்பு தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் தீவிர கண்காணிப்பு தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
ADDED : மே 10, 2024 11:37 PM

புதுடில்லி:“பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களைக் கண்காணிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன,” என, டில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி பி.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
நாட்டின் 18வது லோக்சபா தேர்தலை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், 'டிஜிட்டல் யுகத்தில் தவறான தகவல்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டார். அதைக் களைய தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை கண்டறிந்து தடுக்க வழிமுறைகள் உள்ளன.
அதேபோல பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் செய்திகள் உட்பட சமூக ஊடகங்களின் பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்க டில்லி தேர்தல் ஆணையம் பல்வேறு மட்டங்களில் குழுக்களை அமைத்துள்ளது.
சமூக ஊடகங்கள் உட்பட மின்னணு ஊடகங்களில் வரும் விளம்பரங்களை இந்தக் குழு கண்காணிக்கிறது. அதேபோல 'டிவி' சேனல்கள், இணைய தளங்கள் மற்றும் நாளிதழ்களில் விதிமுறை மீறல் குறித்தும் இந்தக் குழுவினர் கண்காணிக்கின்றனர்.
சமூக ஊடகங்களைக் கண்காணிப்பது மிகப்பெரிய சவால் என்றாலும் அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. சமூக ஊடங்கங்களை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். சமூக ஊடகங்களில் சில பதிவுகளை நீக்கப்பட்டுள்ளன. முற்றிலும் நடுநிலையுடன் இந்தத் தேர்தலை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.