எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு தேர்தல் அதிகாரிகள் பூட்டு
எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு தேர்தல் அதிகாரிகள் பூட்டு
ADDED : மே 15, 2024 09:29 AM
புத்துார் : தேர்தல் நடத்தை விதிகளை மீறி, கூட்டம் நடத்தியதால் எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், நடத்தை விதிகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஜூன் 6ல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அரசியல் தொடர்பான கூட்டங்கள் நடத்தக் கூடாது.
தட்சிண கன்னடா புத்துாரில் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்தது. எனவே புத்துார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசோக்குமார் ராய், நேற்று காலை தன் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதையறிந்து அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், எந்த கூட்டமும் நடத்தக் கூடாது என அறிவுறுத்தினர். எனவே ஆலோசனை கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு, எம்.எல்.ஏ.,வும், அதிகாரிகளும் அங்கிருந்து சென்றனர்.
எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு பூட்டு போட்டதுடன், தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கும் பதிவாகியுள்ளது. அடிப்படை வசதிகள் தொடர்பான விஷயங்களுக்கு, விதிமுறை தடையில்லை என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் ஆலோசனை கூட்டத்துக்கு, அதிகாரிகள் இடையூறு செய்தது சரியல்ல என, பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
***
