கவுரவ ஊக்கத்தொகை ரூ.5,000 ஆக உயர்த்த தேர்தல் பணி வீடியோ கிராபர்கள் கோரிக்கை
கவுரவ ஊக்கத்தொகை ரூ.5,000 ஆக உயர்த்த தேர்தல் பணி வீடியோ கிராபர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 02, 2024 10:31 PM
பெங்களூரு: தேர்தல் நேரத்தில் நடக்கும் அனைத்து வித நடவடிக்கைகளையும் வீடியோ எடுப்பவர்கள், நாள் ஒன்றுக்கு தங்களின் கவுரவ ஊதியத்தை 5,000 ரூபாயாக அதிகரித்துத் தரும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரி உள்ளனர்.
தேர்தல் நேரத்தில் பதற்றம், மிகவும் பதற்றமான பகுதிகளை கண்காணித்து வீடியோ எடுப்பதற்காக, தேர்தல் முடியும் வரை ஒப்பந்த அடிப்படையில் வீடியோகிராபர்கள் நியமிக்கப்படுவர்.
ஓட்டுச்சாவடியில் நடக்கும் ஓட்டுப்பதிவையும், தங்கள் வீடியோவில் பதிவு செய்ய வேண்டியது இவர்களின் பொறுப்பு.
இது மட்டுமின்றி, 80 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளுக்கே சென்று, அவர்கள் ஓட்டுப் போடுவதையும் வீடியோவில் பதிவு செய்வர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன், 2,000 ரூபாய் ஆனது. அதன்பின், உயர்த்தப்படவில்லை.
இது தொடர்பாக வீடியோகிராபர்கள் கூறியதாவது:
ஆன்மிக திருவிழா, திருமணங்கள், சுப நிகழ்ச்சிகளில் புகைப்படக் கலைஞர்கள், வீடியோ கிராபர்களின் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் தேர்தல் நேரத்தில், நாள் முழுதும் ஓட்டுச்சாவடியிலேயே இருக்க வேண்டும். வீடுகளில் இருந்து ஓட்டுப்பதிவு செய்வோரின் வீடுகளை கண்டுபிடித்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கும்.
இத்துடன், ஒரு நாள் முழுதும் அங்கேயே இருக்க வேண்டிய நிலை இருக்கும்.
இதற்காக உதவியாளர்களை அங்கு அனுப்புவோம். அவர்களுக்கு ஒரு நாள் வாடகையை, அன்றே தர வேண்டும். எங்கள் தொகையை பெற, ஒரு மாதத்தில் இருந்து நான்கு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
எனவே போட்டோ கிராபர்கள், வீடியோ கிராபர்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளோம்.
தற்போதைய சூழ்நிலையில், நிர்ணயிக்கப்பட்டு உள்ள தொகைக்கு, வீடியோ கிராபர்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே, ஒரு நாள் கவுரவ ஊக்கத்தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.
அதுமட்டுமின்றி, தேர்தலுக்கு முன்பு, எப்படி வீடியோ எடுக்க வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கும் தினசரி கட்டணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

