எலக்ட்ரிக் வீல் சேர் பெண்ணுக்கு ப்ளூ லைன் மெட்ரோவில் அனுமதி மறுப்பு
எலக்ட்ரிக் வீல் சேர் பெண்ணுக்கு ப்ளூ லைன் மெட்ரோவில் அனுமதி மறுப்பு
ADDED : மே 03, 2024 02:04 AM
புதுடில்லி:உடல் நலக்குறைவால் மோட்டார் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் பெண்ணை, மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மயூர் விஹாரில் வசிப்பவர் அஞ்சு பெனிவால், 42. இவர் உடல் நலக்குறைவால் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ப்ளூலைனில் செக்டார் 16 மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றார்.
அவரை செக்இன் பகுதியில் சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். மெட்ரோ ரயில் நிலைய சக்கர நாற்காலியை பயன்படுத்தும்படி, அஞ்சுவை கேட்டுக் கொண்டார்.
ஆனால், “என்னுடைய மோட்டார் சக்கர நாற்காலி இல்லாமல் என்னால் வெளியே செல்ல முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே நாற்காலியுடன் மெட்ரோவில் பயணம் செய்து வருகிறேன்,” என, சி.ஐ.எஸ்.எப்., வீரரிடம் அஞ்சு கூறினார்.
அவர் கூறியதை ஏற்க மறுத்த சி.ஐ.எஸ்.எப்., வீரர், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இதையடுத்து, ஹரியானா மாநிலம், பஹதுர்கருக்கு அவர் காரில் செல்ல நேரிட்டது.
இது சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து, சி.ஐ.எஸ்.எப்., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மெட்ரோ ரயில்களில் மின் பைக்குகளுக்கு அனுமதி இல்லை. எலக்ட்ரிக் சக்கர நாற்காலி வடிவமைப்பால் சி.ஐ.எஸ்.எப்., வீரர் குழப்பத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது,” என விளக்கம் அளித்துள்ளார்.