கேரளாவில் மின் நுகர்வு உச்சம் : 'ஏசி' பயன்படுத்த கட்டுப்பாடு
கேரளாவில் மின் நுகர்வு உச்சம் : 'ஏசி' பயன்படுத்த கட்டுப்பாடு
ADDED : மே 04, 2024 11:55 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் மின்நுகர்வு உச்சத்தை எட்டுவதால் 'ஏசி' பயன்படுத்த மின்வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
கேரளாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மின்நுகர்வு உயர்கிறது. இதனால், மின் வாரியம் திணறுகிறது.
மே 2ல் மாநிலத்தின் மொத்த மின் நுகர்வு 114.18 மில்லியன் யூனிட்டு களாக இருந்தது. மத்திய மின் தொகுப்பிலிருந்து 450 மெகாவாட் மாதாந்திர ஒப்பந்த அடிப்படையில் பெறப்படுகிறது.
இது தவிர, 5.48 மில்லியன் யூனிட்டுகள் கூடுதலாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. 2026ல் என்ன தேவை இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததோ, அது இப்போது தேவையாக உள்ளது.
எனவே அதிக மின் நுகர்வை தவிர்க்க சில வழிகாட்டுதல்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது :
தொழிற்சாலைகள் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை வேலைகளை தவிர்க்க வேண்டும்.
குடிநீர் பம்பிங் பணிகளின் நேரத்தை குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில் மறு சீரமைக்க வேண்டும்.
பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகைகளில் உள்ள விளக்குகள், அலங்கார விளக்குகளை தவிர்க்க வேண்டும்.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 'ஏசி' பயன்படுத்தும் போது, 26 டிகிரி செல்ஷியஸ் இருப்பது போன்று 'செட்' செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை முடிந்த அளவு மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.