தென் மாநிலங்களின் எல்லை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு 23ல் ஆரம்பம்
தென் மாநிலங்களின் எல்லை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு 23ல் ஆரம்பம்
ADDED : மே 21, 2024 06:23 AM

மைசூரு: கர்நாடகாவின் நாகரஹொளே தேசிய பூங்கா உட்பட தென் மாநிலங்களின் எல்லைகளில், வரும் 23 முதல் 25ம் தேதி வரை தேசிய யானைகள் கணக்கெடுப்புக்கு வனத்துறையினர் தயாராக உள்ளனர்.
தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவுக்கு உட்பட்ட நாகரஹொளே, பண்டிப்பூர், பத்ரா வனப்பகுதிகளில் யானைகள் நடமாடுகின்றன.
* 23 முதல் 25 வரை
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். 2010ல் கர்நாடகாவில் 5,740 யானைகள் இருந்தனு. 2012ல் 6,072ஆக உயர்ந்தது. இதுவே, 2017ல் 6,049ஆக குறைந்தது.
பின், 2023ல் 346 யானைகள் அதிகரித்து, 6,395ஆக உயர்ந்தது. ஆனால், இம்முறை தென் மாநிலங்களின் எல்லைகளில் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக நாகரஹொளே புலிகள் திட்ட இயக்குனர் ஹரிஷ் குமார் கூறியதாவது:
இந்த கணக்கெடுப்பில், 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள நாகரஹொளே, பொன்னம்பேட்டை, விராஜ்பேட் வனப்பகுதியை ஒட்டி உள்ள காபி தோட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
குழுவினரின் பணி
ஒவ்வொரு குழுவிலும் நான்கு முதல் ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவர். முதல் நாளான 23ல் ஊழியர்கள் 5 கி.மீ., நடந்து சென்று, யானைகளை கண்டறிவர். துறை நிர்ணயித்த ஆவணத்தில் தகவல்களை பதிவு செய்வர்.
வரும் 24ல் ஒவ்வொரு குழுவினரும் 2 கி.மீ., யானை வழித்தடத்தை கண்டறிந்து அவற்றின் கால் தடம், சாணத்தை வைத்து கணக்கெடுப்பர். 25ல் ஏரி, நீர் நிலை பகுதியில் காலை 6:00 மணி முதல் முதல் மாலை 6:00 மணி வரை யானைகள் வந்து செல்வதை வைத்து கணக்கெடுப்பர்.
யானைகள், புலிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதால், மனித - விலங்குகள் மோதலை கட்டுப்படுத்த உதவும். அத்துடன் வனப்பகுதி அடர்ந்து காணப்படுகிறதா அல்லது குறைந்துள்ளதா என்பதையும் அறிய முடியும்.
நாட்டிலேயே கர்நாடகாவின் நாகரஹொளே வனப்பகுதியில் தான், 813 யானைக்குட்டிகள் அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

