ADDED : செப் 04, 2024 01:50 AM

மூணாறு : மூணாறு அருகே படையப்பா, ஒற்றை கொம்பன் ஆகிய ஆண் காட்டு யானைகள் நேற்று மோதிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை, சின்னக்கானல் ஊராட்சிகளில் சக்கை (பலாப்பழம்) கொம்பன், முறிவாலன் (முறிந்தவால்) கொம்பன் ஆகிய ஆண் காட்டு யானைகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடின.
அவை நேருக்கு, நேர் எதிர் கொண்டால் எதிரிகளை போன்று மோதிக் கொள்ளும். ஆக.,21ல் இரண்டு யானைகளும் பலமாக மோதிக் கொண்டதில் பலத்த காயம் அடைந்த முறிவாலன் கொம்பன் சிகிச்சை பலனின்றி ஆக.,31 நள்ளிரவில் இறந்தது.
அதன்பிறகு ஓரிரு நாட்களில் மூணாறு அருகே படையப்பா, ஒற்றை கொம்பன் ஆகிய ஆண் காட்டு யானைகள் மோதிக்கொண்டன.
வயது முதிர்ந்த பிரபல படையப்பா கடந்த ஐந்து நாட்களாக நயமக்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டது.
அங்கு கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்த தேயிலை தோட்ட எண் 4ல் நேற்று பகலில் சுற்றி திரிந்த படையப்பாவை, அங்கு வந்த ஒற்றை கொம்பன் தாக்கியதால் பலமாக மோதிக் கொண்டன.
அவை காயமடைந்ததாக தெரியவந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்தில் வனத்துறையின் யானை தடுப்பு பிரிவினர் முகாமிட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்தனர்.