ADDED : மே 19, 2024 02:04 AM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகே வலியேரி வன எல்லை பகுதியில், மின்கம்பம் உடைந்து கீழே விழுந்து கிடந்தது. நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள், இரு கரடிகள் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதை கண்டனர்.
வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி தெற்கு பிரிவு வன அதிகாரி சதீஷ் தலைமையிலான வன துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு கரடிகள் உடல்களை மீட்டு, தோணியில் உள்ள வனத்துறை தாற்காலிக கால்நடை மையத்திற்கு கொண்டு வந்தனர்.
நேற்று காலை, தலைமை கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவர் டேவிட் ஆபிரகாமின் தலைமையிலான மருத்துவ குழு, கரடி உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர்.
வாளையார் வனச்சரக அதிகாரி முகமது அலி ஜின்னா கூறியதாவது:
அய்யப்பன் மலைக்கு கீழ் உள்ள பகுதியில், மின்சாரம் பாய்ந்து, 12 வயது தாய் கரடியும், 3 வயது குட்டி கரடியும் இறந்தன. நேற்று முன்தினம் காலை விபத்து நடந்திருக்கலாம். இரவில் மழை பெய்த போது, மின்பாதையில் மரம் விழுந்து, மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. மின் இணைப்பு கம்பிகள் அறுந்து போகாமல் கீழே கிடந்துள்ளது. மின் கம்பியை இரு கரடிகளும் கடந்து சென்ற போது, மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் முதல்முறையாக மின் விபத்தில் கரடிகள் இறந்துள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, நீலகிரி வனக்கோட்டம், குஞ்சப்பனை பழங்குடியினர் கிராமத்தில் தேயிலை மற்றும் காபி தோட்டங்களுக்கு நடுவே இருந்த பலா மரங்கள் பலாப்பழம் சாப்பிட வந்த ஆண் யானை, மரத்தை சாய்த்த போது, மின்கம்பமும் சாய்ந்து மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தது.
மாவட்ட வன அலுவலர் கவுதம், முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார், கோத்தகிரி கால்நடை மருத்துவர் ரேவதி ஆகியோர் யானையை பிரேத பரிசோதனை செய்தனர். வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

