குருவாயூரில் யானை சிலைக்கு மலர் துாவி யானைகள் அஞ்சலி
குருவாயூரில் யானை சிலைக்கு மலர் துாவி யானைகள் அஞ்சலி
ADDED : மார் 02, 2025 06:39 AM

பாலக்காடு : குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மூலவர் அருள் பெற்றதாக, பக்தர்களால் போற்றப்படும் 'பத்மநாபன்' என்ற யானையின் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோவில் யானை 'பத்மநாபன்' நோய்வாய்ப்பட்டு இறந்தது. கோவிலில் மூலவர் அருள் பெற்றதாக, பக்தர்களால் போற்றப்படும் இந்த யானையை சிறப்பிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் சிலை நிறுவப்பட்டு ஆண்டுதோறும் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
நடப்பாண்டு, யானையின் நினைவு தினம் நேற்று கோவில் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடந்தன. காலை, 8:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் 'பத்மநாபன்' யானையின் உருவச்சிலைக்கு முன், கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான, இந்திரசென், சங்கரநாராயணன், கஜேந்திரா ஆகிய மூன்று யானைகள் மலர் தூவி, துதிக்கையை உயர்த்தி வணங்கி நினைவஞ்சலி செலுத்தின.
தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மனோஜ், நிர்வாகி வினயன் மற்றும் பக்தர்கள் மலர் தூவி வணங்கி நினைவஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.