ADDED : மே 13, 2024 03:14 AM

மூணாறு : கேரளாவில் கோடை மழை சற்று கால தாமதமாக தற்போது பெய்து வருகிறது. மாநிலத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு, 'எல்லோ அலெர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி இடுக்கி, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இந்த மழை அறிவிப்பு, கேரள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூணாறில் கடந்த நான்கு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் சற்று தணிந்து குளுமையான சூழல் நிலவுகிறது.
நேற்று காலை பலத்த மழை பெய்தது. அதனால் சற்று இருள் போன்ற சூழல் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன.