ADDED : ஆக 29, 2024 01:01 AM

புதுடில்லி:
வேலைவாய்ப்பு சந்தையில், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், 14 முதல் 18 வயது வரையிலான வளரிளம் பெண்களுக்கு, வழக்கத்துக்கு மாறான புதிய வேலைகளில் பயிற்சியளிக்கும் சிறப்பு திட்டத்தை துவங்க இருப்பதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலர் அனில் மாலிக் கூறியதாவது:
சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம், முதற்கட்டமாக சோதனை முறையில், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், 27 மாவட்டங்களில் துவங்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து, நாடு முழுதும் 218 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
வளரிளம் பெண்கள் தங்கள் படிப்பை இடையூறு இன்றி தொடரும் வகையில், அவர்களின் பள்ளி மற்றும் வீட்டின் அருகே பயிற்சி அளிக்கப்படும்.
இதில், வேலைவாய்ப்பு பயிற்சியுடன், டிஜிட்டல் திறன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பொது ஆளுமைத்திறன் வளர்ப்பு பயிற்சிகள் ஆகியவையும் அடங்கும். இதற்காக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

