'ஹிந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்' முதல்வருக்கு ஈஸ்வரப்பா எச்சரிக்கை
'ஹிந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்' முதல்வருக்கு ஈஸ்வரப்பா எச்சரிக்கை
ADDED : செப் 09, 2024 04:49 AM

பாகல்கோட் : ''ஹிந்துக்களின் உணர்வுகளுடன் முதல்வர் சித்தராமையா விளையாடுகிறார். ஹிந்து கடவுளை அவமதிக்க வேண்டாம்,'' என முதல்வர் சித்தராமையாவுக்கு, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய உணவு பாதுகாப்பு, தரம் கட்டுப்பாட்டில் பதிவு செய்த அல்லது அனுமதி பெற்ற நபரோ அல்லது அமைப்பினர் மட்டுமே, விநாயகர் சதுர்த்தியன்று வழங்கப்படும் பிரசாதத்தை தயாரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு பா.ஜ., உட்பட பல ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாகல்கோட்டில் நேற்று ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் பிரசாதம் வழங்குவதாக இருந்தால், உணவு துறையினர் சோதனை செய்ய வேண்டுமாம். காங்கிரஸ் உருவாவதற்கு முன்பே, சித்தராமையா பிறப்பதற்கு முன்னரே, நாட்டில் விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் அரசு, புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. ஹிந்து மதத்தை பற்றி காங்கிரஸ் ஏன் இப்படி கீழ்த்தரமான அரசியல் செய்கிறது.
மசூதிகள், தேவாலயங்களில் உணவை சோதித்தீர்களா. ஹிந்துக்களின் உணர்வுகளுடன் முதல்வர் சித்தராமையா விளையாடுகிறார். ஹிந்து கடவுளை அவமதிக்க வேண்டாம்.
காங்., ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சித்தராமையா உள்ளிட்டோர் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றன.
இதனால், முதல்வர் நாற்காலி மீது காங்கிரசின் பலரின் பார்வை விழுந்துள்ளது. ஒரு பக்கம் முதல்வரை மாற்ற மாட்டோம் என்று ஆதரவளிக்கின்றனர்.
மற்றொரு பக்கம், முதல்வர் பதவிக்கு கட்சியினர் ஏங்குகின்றனர். நாளை (இன்று) நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஹிந்து கலாசாரத்தை காப்பாற்றும் ஒரே கட்சி பா.ஜ., மட்டும் தான். நாட்டின் பிரதமர்கள், பல மாநிலங்களில் முதல்வர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் இருப்பதற்கு ஹிந்து கலாசாரமே காரணம். பா.ஜ.,வை பல ஆண்டுகளாக பலர் தங்களின் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி, உருவாக்கினர். தற்போது இக்கட்சி, சில குடும்பங்களின் கைகளில் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.