ADDED : ஏப் 17, 2024 06:15 AM

பெங்களூரு : கட்சி உத்தரவுக்கு பணியாமல், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவை, கட்சியில் இருந்து நீக்க மேலிடம் ஆலோசிக்கிறது.
லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்கும் என, ஈஸ்வரப்பா எதிர்பார்த்தார். ஆனால் பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ., மேலிடம், சீட் கொடுத்தது. இதனால் அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகா தொகுதியில் கட்சி வேட்பாளர் ராகவேந்திராவுக்கு எதிராக, போட்டியிடுகிறார். வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட, முக்கிய தலைவர்கள் சமாதானம் செய்தும், ஈஸ்வரப்பா மசியவில்லை. தொகுதியில் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இவரது மனதை மாற்றி, வேட்பு மனுவை திரும்ப பெற வைக்க பா.ஜ., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் ஈஸ்வரப்பா, பிரம்மனே வந்தாலும் வேட்புமனுவை திரும்ப பெற முடியாது என, திட்டவட்டமாக கூறியுள்ளார். ஒரு பக்கம் பிரதமர் மோடி உட்பட, மத்திய தலைவர்களின் புகழ் பாடுகிறார்.
மற்றொரு பக்கம் எடியூரப்பாவையும், அவரது குடும்பத்தினரையும் வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறார். எடியூரப்பா குடும்பத்தினரிடம் இருந்து, கட்சியை மீட்பதாக சபதம் செய்துள்ளார்.
ஈஸ்வரப்பா வேட்புமனுவை திரும்ப பெற, ஏப்ரல் 22 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தால், இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க, பா.ஜ., மேலிடம் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.

