ADDED : ஆக 29, 2024 02:44 AM

பெங்களூரு,: சர்க்கரை ஆலையை திறக்க, கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், அலட்சியமாக செயல்படும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்டித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.
விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். இவருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை கலபுரகியின் சிஞ்சோலியில் உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை கடைப்பிடிக்கவில்லை என கூறி, கடந்த ஜனவரி மாதம் சர்க்கரை ஆலைக்கு, கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், எத்னால் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் தொழிற்சாலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நீதிமன்றம் அனுமதி அளித்தும், சர்க்கரை ஆலையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு அசோக்நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு எத்னால் சென்றார்.
அங்கு அமர்ந்து இரவு முழுதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். நேற்று காலை அந்த அலுவலகத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எத்னாலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின், எத்னால் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் பின்தங்கிய தாலுகாவான சிஞ்சோலியில் சர்க்கரை ஆலை அமைத்தேன். இங்கு தலித் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சர்க்கரை ஆலையை திறந்த போதே காங்கிரஸ் பிரச்னை செய்தது.
நீதிமன்றம் அனுமதி அளித்தும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அலைந்து திரிந்து எந்த பயனும் இல்லை. இதனால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினேன். இங்கு சட்டவிரோதம் நடக்கிறது. இதனை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.