ADDED : ஆக 28, 2024 05:16 AM

கர்நாடகாவில் 2018 சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த பா.ஜ.,வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
அப்போது, குமாரசாமி தலைமையில் ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து, 2019ல், எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது.
கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பெலகாவியின் மூத்த அரசியல் தலைவர் ரமேஷ் ஜார்கிஹோளி. இதுபோன்று, ஹிந்து ஆதரவு போராட்டங்களால் பிரபலமானவர் விஜயபுரா மூத்த தலைவர் பசனகவுடா பாட்டீல் எத்னால். ஒரு காலத்தில், எடியூரப்பாவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்.
அதிருப்தி
எடியூரப்பா முதல்வர் ஆவதற்கு காரணமாக இருந்த அந்த இருவருமே, தற்போது அவருக்கு எதிராக உள்ளனர். எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திரா தான், தற்போதைய மாநில தலைவர்.
இவர் மீதும் அந்த இரண்டு தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, விஜயேந்திராவுக்கு பதவி கொடுத்தது பிடிக்கவில்லை. இதனால் கட்சி வளராது, எடியூரப்பா குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு தான் உயரும் என்பது அவர்களின் கணிப்பு.
மூத்த தலைவர்களாக இருந்தும், தங்களுக்கு எந்த விதமான பதவியும் கிடைக்கவில்லையே என்று இவர்களின் வரிசையில் இன்னும் பல தலைவர்கள் உள்ளனர். இப்படியே விட்டால், நமது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
எனவே தங்கள் பலத்தை காண்பிக்கும் வகையில், தற்போது காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை முன் வைத்து, பாதயாத்திரை மேற்கொள்ள அதிருப்தி தலைவர்கள் திட்டமிட்டனர்.
அதுவும் மாநில தலைவர் இல்லாமல் பாதயாத்திரை நடத்தி, தாங்கள் யார் என்பதை நிரூபிப்பதற்கு ஒன்று திரண்டனர். இதற்கு பா.ஜ., மேலிடம் தடை விதித்தது.
பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி இருவரையும் கடந்த வாரம் டில்லிக்கு அழைத்த மேலிடம், 'சற்று அமைதியாக இருங்கள். அனைத்தும் சரியாகி விடும். அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என உத்தரவிட்டது.
ஆலோசனை
ஆனால், விஜயேந்திராவின் பதவியை பறிக்கும்படி அவர்கள் இருவரும் பிடிவாதம் பிடித்தனர். அப்போது மேலிடம், 'எப்போது, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்' என கூறி அனுப்பி உள்ளது. அப்போதில் இருந்து, இருவரும் அமைதியாக இருக்கின்றனர்.
இதற்கிடையில், மாநில தலைவர் விஜயேந்திராவை, கட்சி மேலிடம் நேற்று முன்தினம் டில்லிக்கு அழைத்தது. அவரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மூத்த தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செல்லும்படி நட்டா அறிவுறுத்தினார். 'யார் என்ன சொன்னாலும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் எதுவும் பகிரங்கமாக பேசக் கூடாது' என்றும் நட்டா அறிவுரை கூறியுள்ளார்.
- நமது நிருபர் -