தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே எம்.பி.,யான காங்., வேட்பாளர்
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே எம்.பி.,யான காங்., வேட்பாளர்
ADDED : மே 09, 2024 10:29 PM

மைசூரு, - லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே, காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணை, ஆதரவாளர்கள் எம்.பி.,யாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான நிகழ்ச்சி அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. ஜூன் 4ல் தேர்தல் முடிவு வெளியாகவுள்ளது. இந்நிலையில், மைசூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரின் மகள் திருமணம் நடந்தது. வரும் 12ல் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.
அழைப்பிதழில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., யதீந்திரா உட்பட பலரின் பெயர் உள்ளது.
அதே போன்று மைசூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் எம்.பி., என அச்சிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே, இவரை எம்.பி., என, அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளதால் விமர்சிக்கப்படுகிறது. 'விசுவாசத்துக்கும் ஒரு எல்லை இல்லையா' என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.