மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீடு மீது குண்டு வீசி தாக்குதல்
மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீடு மீது குண்டு வீசி தாக்குதல்
ADDED : செப் 07, 2024 12:57 AM

இம்பால், மணிப்பூர் முன்னாள் முதல்வர் மைரம்பம் கொய்ரெங் வீட்டின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த பிரச்னை இன்னும் முழுமையாக தீரவில்லை. இரு தரப்பிலும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், இம்பால் அருகே உள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் இருந்து கீழே உள்ள த்ரோங்லாபி கிராம குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் லாஞ்சர் உதவியுடன், நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
த்ரோங்லாபிக்கு அருகே உள்ள கும்பி கிராமத்தில் நேற்று, பல ட்ரோன்கள் 100 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் பறந்துள்ளன. இதனால் அந்த கிராமத்தினர் பீதியடைந்தனர்.
இதற்கிடையே பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ராங் பகுதியில் முன்னாள் முதல்வர் மைரம்பம் கொய்ரெங் வீட்டு வளாகத்தின் உள்ளே நேற்று இரவு ராக்கெட் குண்டு வந்து விழுந்தது.
அப்போது அங்கு இருந்த முதியவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். 13 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.