கூகுளில் தேடி திட்டம் தயாரிக்கும் மாஜி அதிகாரிகள்
கூகுளில் தேடி திட்டம் தயாரிக்கும் மாஜி அதிகாரிகள்
ADDED : செப் 05, 2024 06:26 AM

புதுடில்லி: நெடுஞ்சாலை, சுரங்கச் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படாததற்கு முக்கிய குற்றவாளி, அதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பவர்களே என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
டில்லியில் நேற்று நடந்த, 'பிக்கி' எனப்படும் தொழில் கூட்டமைப்பின், 'இந்தியாவில் சுரங்கச் சாலைகள்' என்ற கருத்தரங்கில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
எந்த ஒரு உள்கட்டமைப்பு திட்டமும் முறையாக செயல்படுத்தப்படாததற்கு முக்கிய குற்றவாளி, அதற்கான டி.பி.ஆர்., எனப்படும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் நிறுவனங்களே. இதனாலேயே, விபத்துகள், சுரங்கம் இடிந்து விழுவது போன்றவை ஏற்படுகின்றன.
இந்த நிறுவனங்களை, பெரும்பாலும் முன்னாள் அரசு அதிகாரிகளே நடத்துகின்றனர். இந்த நிறுவனங்கள், திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களுக்கு செல்லாமலேயே, அங்குள்ள சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமலேயே, கூகுள் இணையதளத்தில் இருந்து தகவல்களை எடுத்து, விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்கின்றனர்.
விரிவான திட்ட அறிக்கையில் கூறப்படும் தொழில்நுட்ப தகவல்கள், அமைச்சர்களுக்கு தெரியாமல் இருக்கும். அதிகாரிகள் அளிக்கும் தகவல்களை வைத்தே திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கிறோம். இதைத் தவிர, டெண்டர்களிலும் மோசடி செய்கின்றனர். மோசடி செய்து விலையை ஏற்றி விடுகின்றனர்.
இணை செயலர், சார்பு செயலர் ஆகியோரே எங்களுடைய வழிகாட்டிகள், ஆலோசகர்கள். அவர்கள் தயாரிக்கும் அறிக்கையில், டைரக்டர் ஜெனரல் கையெழுத்திடுகிறார்.
அதை ஏற்று அமைச்சரும் கையெழுத்திடுகிறார். இந்த அடிப்படையிலேயே ராம ராஜ்ஜியத்தை நடத்துகிறோம். அனைத்து நிலை அதிகாரிகளும் இதை உணர்ந்து, புரிந்து, திட்டங்களை தயாரிக்க வேண்டும்; செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.