புனித வெள்ளியன்று தேர்வு: பீஹார் கல்வி துறையில் சர்ச்சை
புனித வெள்ளியன்று தேர்வு: பீஹார் கல்வி துறையில் சர்ச்சை
ADDED : மார் 25, 2024 06:35 AM

பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு சமீபத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை அனுப்பியது.
அதில், 'கல்வி ஆராய்ச்சி அமைப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்த அடிப்படை கல்வியறிவு தொடர்பான பயிற்சியில் பங்கேற்காத 19,200 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல் 30ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
'கல்வி அதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்' என கூறியிருந்தது.
வடமாநிலங்களில் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் ஆசிரியர்களுக்கு கட்டாய பயிற்சி நடத்துவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் கல்வி துறையின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஹோலி பண்டிகையின் போதும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பீஹாரில் இது போன்று முன் எப்போதும் நடந்ததில்லை.
ஒட்டுமொத்த மாநிலமும் ஹோலி கொண்டாடும் வேளையில், ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டி உள்ளது. முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்' என கூறியுள்ளார். இதே போல் புனித வெள்ளியான வரும் 29ம் தேதி, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளதும் சர்ச்சையாகி உள்ளது.
இந்த விஷயத்தில் கவர்னரே தலையிட்டு உள்ளார்.
கவர்னரின் முதன்மை செயலர் ராபர்ட், மார்ச் 29ல் நடைபெறும் தேர்வை வேறு தேதிக்கு மாற்றக்கோரி அரசின் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

