விவசாயிகளிடம் சுரண்டல்; அரசு மீது விஜயேந்திரா புகார்
விவசாயிகளிடம் சுரண்டல்; அரசு மீது விஜயேந்திரா புகார்
ADDED : மே 22, 2024 06:40 AM

பெங்களூரு : ''விரோத அரசியலுக்கு பெயர் போன காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகளிடம் வரம்பு மீறி சுரண்டப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடக மக்கள் இன்னும் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால், 223 தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு நிவாரண நிதி வழங்கியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மாநில அரசு இன்னும் வழங்கப்படவில்லை.
இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
விரோத அரசியலுக்கு பெயர் போன காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகளிடம் வரம்பு மீறி சுரண்டப்படுகிறது. அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் யம்கன்மரடி தொகுதியின் இஸ்லாம்பூர் கிராமத்தில் விவசாயி கடன் வாங்கி இருந்தார்.
கடனை திரும்ப செலுத்த தாமதம் செய்ததால், அவரது மனைவி, மகனை வீட்டு சிறையில் வைத்தனர். இதனால் மனம் நொந்த விவசாயி, தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால், ஒட்டுமொத்த மனித குலம், தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடக மக்கள் இன்னும் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை. குண்டர்கள், கந்து வட்டிகாரர்கள், கொலையாளிகளை, இந்த அரசு பாதுகாக்கிறது.
அரசுக்கு தைரியம் இருந்தால், விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவம் நடக்காத வகையில் எச்சரிக்கை வகிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு தைரியம் ஊட்ட வேண்டும். இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு உரிய நிவாரண நிதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

