ADDED : ஏப் 26, 2024 09:21 PM
புதுடில்லி:டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்தன.
டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.
மணீஷ் சிசோடியாவுக்கு நேற்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன், காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க எத்தனை நாள் ஆகும் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறை வழக்கறிஞர்கள் நவீன் குமார் மட்டா மற்றும் சைமன் பெஞ்சமின் ஆகியோர், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தாமதப்படுத்துகின்றனர்,”என, குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, மே 8ம் தேதி வரை சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கானா எம்.எல்.சி., கவிதா ஆகியோர் மே 7ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

