வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு: பெண் உட்பட மூவர் கைது
வாலிபரை மிரட்டி பணம் பறிப்பு: பெண் உட்பட மூவர் கைது
ADDED : ஆக 16, 2024 06:51 AM
சம்பிகேஹள்ளி: உல்லாசமாக இருக்க அழைத்து வீடியோ எடுத்து, வாலிபர்களை மிரட்டி பணம் பறித்த பெண் உட்பட, 'ஹனிடிராப்' கும்பலின் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் பவன், 25. கூரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன், பவனின் மொபைல் நம்பருக்கு 'மிஸ்டு கால்' வந்தது
அந்த நம்பருக்கு அவர் திரும்ப அழைத்தார். எதிர்முனையில் பெண் பேசினார்.
'உங்கள் குரல் அழகாக உள்ளது; உங்களை நேரில் பார்க்க முடியுமா' என்று, பெண் கேட்டு உள்ளார்.
பின், இருவரும் தினமும் 'வாட்ஸாப்' வீடியோ காலில் பேசினர். கடந்த வாரம் பவனிடம் பேசிய பெண், 'எனது கணவர் வேறு ஊருக்கு சென்று உள்ளார். எனது வீட்டிற்கு வா. உல்லாசமாக இருக்கலாம்' என்று அழைத்து உள்ளார்.
இதனால் சம்பிகேஹள்ளியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு, அவர் சென்றார். படுக்கை அறைக்கு அவரை, பெண் அழைத்து சென்றார்.
அப்போது அந்த அறைக்குள் இருந்த இரண்டு பேர், பவனும், பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை அவரிடம் காட்டி, வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டினர். பின் 5,000 ரூபாயை பறித்து அவரை அனுப்பினர்.
சம்பிகேஹள்ளி போலீசில், பவன் புகார் செய்தார்.
புகாரின்படி, சம்பிகேஹள்ளியின் நஜ்மா கவுசர், 30 என்ற பெண், இவரது உறவினர்களான முகமது ஆஷிக், 32, கலீல், 28 ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பல வாலிபர்களை வரவழைத்து, வீடியோ எடுத்து, பணம் பறித்தது தெரிந்தது.
இவர்களால் எத்தனை வாலிபர்கள் பாதிக்கப்பட்டனர் என்று, போலீசார் விசாரிக்கின்றனர்.