ADDED : மே 09, 2024 06:31 AM

வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், குடும்பத்துடன் எங்கேயாவது சுற்றுலா சென்று வரலாம் என்று நினைப்பர். அதிலும் தற்போது கோடை வெயில் வாட்டி வருவதால், குளுகுளுப்பாக இருக்கும் இடம் அல்லது கடற்கரை பகுதிகளை நோக்கிச் செல்ல திட்டமிடுவர்.
கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் ஏராளமான கடற்கரைகள் உள்ளன. அங்கு உள்ள பெரும்பாலான கடற்கரைகள் எப்போதும், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு இடம் தான், ஒட்டினே கடற்கரை. உடுப்பியின் பைந்துாரில் ஒட்டினே கடற்கரை உள்ளது. கடற்கரையின் அருகே பைந்துார் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் தண்ணீரும், இங்கு கடலில் கலக்கிறது. அந்த காட்சியை காண பிரம்மிப்பாக இருக்கும்.
கடலில் ஆழமும் குறைவு என்பதால், சுற்றுலா பயணியர் உற்சாக குளியல் போடுகின்றனர். காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை கடற்கரை மணலில் அமர்ந்து பார்ப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கடற்கரை அருகில் சோமேஸ்வர் கோவிலும் இருக்கிறது. ஒட்டினே கடற்கரையில் இருந்து மரவந்தே கடற்கரை 25 கி.மீ.,யிலும், கொல்லுார் மூகாம்பிகை கோவில் 35 கி.மீ.,யிலும், முருடேஸ்வர் 34 கி.மீ.,யிலும் அமைந்துள்ளன.
ஒட்டினே கடற்கரை அருகே, சுற்றுலா பயணியர் தங்கும் வகையில், சிறிய காட்டேஜ்களும் உள்ளன. பெங்களூரில் இருந்து 440 கி.மீ., துாரத்திலும், மங்களூரு விமான நிலையத்தில் இருந்து 125 கி.மீ., துாரத்திலும், இந்த கடற்கரை அமைந்துள்ளது.
பெங்களூரில் இருந்து பஸ் வசதியும் உள்ளது. பஸ்சில் செல்பவர்கள் பைந்துார் பஸ் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும்.
ரயிலில் செல்பவர்கள் மூகாம்பிகா ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, வாடகை கார்களில் செல்லலாம்
- நமது நிருபர் -.