தொழிற்சாலையால் சாகுபடி பாதிப்பு செடிகளிலேயே அழுகும் எலுமிச்சை
தொழிற்சாலையால் சாகுபடி பாதிப்பு செடிகளிலேயே அழுகும் எலுமிச்சை
ADDED : பிப் 10, 2025 05:41 AM

கொப்பால்: நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தின் அலட்சியத்தால், விவசாயிகளின் விளைச்சல் பாழாகிறது. லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
கொப்பால் மாவட்டம், எலபுர்கா தாலுகாவின் யட்டோனி கிராமத்தில், 'ஓரியண்டல் ஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்' என்ற தொழிற்சாலை உள்ளது.
இந்நிறுவனம், குஷ்டகியின், கந்தகூர் கிராமத்தில் நெடுஞ்சாலையை பழுது பார்க்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளது. பணிகளுக்கு தேவையான சிமென்ட் கலவை, தார் இந்த தொழிற்சாலையில் இருந்து அனுப்பப்படுகிறது.
இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை, துாசியால் விவசாயிகள் பாதிப்படைந்து உள்ளனர். கந்தகூர் கிராமத்தின் அருகில், தொழிற்சாலை உள்ளது.
கந்தகூர் உட்பட தொழிற்சாலை சுற்றுப்பகுதி விவசாயிகள் பலரும் எலுமிச்சை விளைவித்துள்ளனர். துாசி படிவதால் எலுமிச்சை விரைவில் கெட்டு விடுகின்றன. யாரும் வாங்குவதில்லை.
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலுமிச்சை, தோட்டங்களிலேயே அழுகுவதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
பல விவசாயிகள் மாதுளை விளைவித்துள்ளனர். துாசி காரணமாக இதுவும் சரியாக விளையவில்லை. 10 ஆண்டுகளாக இப்பிரச்னையை அனுபவிக்கின்றனர்.
நஷ்டம் ஏற்படுவதால், பல விவசாயிகள் நிலம் இருந்தும் பயிரிடுவது இல்லை. செலவிட்டு நஷ்டம் அடைய வேண்டாம் என விவசாயத்தை நிறுத்தி உள்ளனர்.
தொழிற்சாலை நிர்வாகத்திடம், விவசாயிகள் பல முறை வேண்டுகோள் விடுத்தும் பயன் இல்லை. 'மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை' என, விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.