ADDED : ஜூலை 02, 2024 06:39 AM
பெங்களூரு; ''போலி செய்திகள் குறித்து, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும்,'' என, பத்திரிகை, ஊடகங்களுக்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார்.
பெங்களூரு பிரஸ் கிளப், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் தகவல் விளம்பர துறை இணைந்து நேற்று நடத்திய, 'பத்திரிகை தின' நிகழ்ச்சியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்து பேசியதாவது:
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் போலி செய்திகள், சமூகத்துக்கு பேரழிவு. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலி செய்திகளை கண்காணிக்க, தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, போலி செய்திகள் கண்டறியப்பட்டு வருகின்றன. போலி செய்திகள் குறித்து, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
முன்னர் மொபைல் போன் வைத்திருந்தேன். இதனால், இரவு முழுதும் போன் அழைப்பு வந்து கொண்டிருந்தது. என்னால் துாங்க முடியவில்லை. எனவே, மொபைல் போன் வைத்து கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தேன். மொபைல் போன் இல்லாததால் தனி உதவியாளரிடம் இருந்து தகவல் கேட்டு தெரிந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
***