ADDED : ஆக 25, 2024 10:26 PM
பெங்களூரு:
காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கரப்பாவின் பெயரில், போலியான சிபாரிசு கடிதம் தயாரித்து, அந்தரங்க உதவியாளர் பதவியில் அமர முயற்சித்த பெண் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
ராம்நகர், மாகடியின் சோலுார் கிராமத்தை சேர்ந்தவர் வினுதா, 25. இவரை தன் அந்தரங்க செயலராக நியமிக்கும்படி, தாவணகெரெ தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான சிவசங்கரப்பா அனுப்பியதாக கூறப்படும், சிபாரிசு கடிதம் சட்டசபை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
இது, சிவசங்கரப்பாவின் கையெழுத்துடன் கூடிய லெட்டர் ஹெட்டில் இருந்ததால், அதை உண்மையான சிபாரிசு கடிதம் என, நம்பிய சட்டசபை அமைச்சகம், அவரது அந்தரங்க செயலராக வினுதாவை நியமித்து உத்தரவிட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிவசங்கரப்பா, 'எனக்கு அந்தரங்க செயலர் தேவையில்லை. இதற்காக சிபாரிசும் செய்யவில்லை' என, சட்டசபை அமைச்சகத்திடம் கூறினார்.
இது தொடர்பாக, சட்டசபை அமைச்சக செயலர் லலிதா, விதான்சவுதா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வினுதா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.

