என் மீது பொய் வழக்கு போடுவதா? பா.ஜ., மீது சித்தராமையா ஆவேசம்!
என் மீது பொய் வழக்கு போடுவதா? பா.ஜ., மீது சித்தராமையா ஆவேசம்!
ADDED : ஆக 20, 2024 11:27 PM

பெங்களூரு : ''நான் சமத்துவமின்மைக்கு எதிரான போராளி. என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் பிறந்த நாளை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில், அவரது படத்துக்கு முதல்வர் சித்தராமையா மலர் துாவி வணங்கினார்.
பின், குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
நான் சமத்துவமின்மைக்கு எதிரான போராளி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.,வினர், என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
காங்கிரசும், சமத்துவமின்மையை அகற்ற விரும்புகிறது. சமத்துவமின்மைக்கு எதிராக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால், பா.ஜ.,வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ராஜிவ் கனவு
ராஜிவ், இளம் வயதிலேயே பிரதமரானார். அவர், பிரதமராக இருந்தபோது, 'நவீன இந்தியா' கனவு கண்டார். இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமாக இருந்தார்.
எப்போதும் சமூக நீதிக்கு ஆதரவாக செயல்பட்டார். நாட்டில் மாற்றம் வர வேண்டும். சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்தியர்கள் ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளை மறந்து, எங்கிருந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டார்.
குறிப்பாக பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இந்நாட்டில் பெண்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால், அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களே காரணம்.
சமூக நீதி
தேவராஜ் அர்ஸ், நீண்ட காலம் முதல்வராக ஆட்சி செய்தார். அவரது அரசை சமூக நீதியின் முன்னோடி என்கிறோம். ஹவனுார் கமிஷன் அமைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கினார்.
சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டவர்களை அரசியல் ரீதியாக அடையாளம் கண்டு, அவர்களை தேர்தலில் நிற்க அனுமதித்தார். விதான் சவுதா படிக்கட்டில் ஏற முடியாது என்று நினைத்தவர்களை கூட, விதான் சவுதாவுக்குள் நுழைய வைத்தவர் அவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் பிறந்த நாளை ஒட்டி, அவரது படத்துக்கு முதல்வர் சித்தராமையா மலர் துாவி வணங்கினார்.