தவறான அறிக்கை: ஸ்கேன் சென்டருக்கு ரூ.30 லட்சம் அபராதம்
தவறான அறிக்கை: ஸ்கேன் சென்டருக்கு ரூ.30 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 15, 2024 04:33 AM
ஹாசன்: கர்ப்பிணிக்கு தவறான அறிக்கை அளித்த ஸ்கேனிங் சென்டருக்கு, நுகர்வோர் நீதிமன்றம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஹாசன் ஆலுாரின் ஹள்ளிகொப்பலு கிராமத்தில் வசிக்கும் பவித்ரா, 24, கர்ப்பிணியாக இருந்தார். ஹாசன் நகரின் தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். பிரசவத்துக்கு முன் குழந்தையின் வளர்ச்சியை தெரிந்து கொள்ள, ஸ்கேன் செய்யும்படி டாக்டர் பிரதிமா ஆதர்ஷ் கூறினார்.
இதன்படி ஹாசன் நகரின், கே.ஆர்.புரத்தில் உள்ள ரேடியோலஜிஸ்ட் டாக்டர் சுஜாதாவின் ஸ்கேனிங் சென்டருக்கு சென்று, ஸ்கேனிங் செய்து கொண்டார். 2023 மார்ச் 15ல் ஸ்கேனிங் அறிக்கை வந்தது. குழந்தையின் உதடு, கண், மூக்கு நன்றாக உள்ளது என, அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கடந்த 2023 ஜூலை 19ல், பவித்ராவுக்கு பிரசவம் நடந்து, பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு உதடு கிழிந்திருந்தது. மூக்கும் சரியான வளர்ச்சியில் இல்லை. குழந்தையின் உடல் உறுப்பு சரியில்லை என, ஸ்கேனிங் அறிக்கையில் கூறியிருந்தால், அப்போதே கருக்கலைப்பு செய்திருக்கலாம். ஆனால் டாக்டர் சுஜாதா, ஸ்கேனிங் அறிக்கையில், இந்த விபரங்களை தெரிவிக்கவில்லை.
இவரது குளறுபடியால், குழந்தை ஆயுட்காலம் வரை, சிகிச்சை பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குடும்பத்தினர் மன வலிக்கு ஆளாகினர். குழந்தையின் மருத்துவ செலவுக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் கோரி, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பவித்ரா குடும்பத்தினர், மனு தாக்கல் செய்தனர்.
விசாரணையில் ஸ்கேனிங் சென்டரின் குளறுபடி உறுதியானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இதில் 15 லட்சம் ரூபாயை, குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் வரை, குழந்தையின் பெயரில் தேசிய வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும். 15 லட்சம் ரூபாயை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும்.
புகார்தாரரின் வழக்கு செலவுக்கு 50,000 ரூபாய் வழங்க வேண்டும். இந்த தொகையை, உத்தரவு வெளியான நாளில் இருந்து, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டியுடன், நிவாரணம் வழங்க வேண்டும் என, நேற்றுதீர்ப்பளித்தது.

