தனியார் பஸ்களில் கட்டணம் அதிகரிப்பு; ஓட்டு போட செல்லும் பயணியர் அவதி
தனியார் பஸ்களில் கட்டணம் அதிகரிப்பு; ஓட்டு போட செல்லும் பயணியர் அவதி
ADDED : மே 03, 2024 11:23 PM
பெங்களூரு : கர்நாடகாவில் முதற்கட்ட ஓட்டுப் பதிவின்போது, கட்டணத்தை மனம் போனபடி உயர்த்திய, தனியார் பஸ்கள், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவிலும் அதையே செய்கின்றனர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலின், முதற்கட்ட ஓட்டுப் பதிவு, ஏப்ரல் 26ல் நடந்தது. கல்வி, தொழில், வேலை என, பல காரணங்களால் கிராமங்களில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு வந்துள்ள மக்கள், ஓட்டுப் போட சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
பயணியரின் வசதிக்காக, ரயில்வேத்துறை சிறப்பு ரயில்களை இயக்கியது. அதே போன்று, கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதல் பஸ்களை இயக்கியது. ஆனால் பயணியர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததால், பஸ்கள், ரயில்கள் பற்றாக்குறை நிலவியது.
தனியார் பஸ்களை பயன்படுத்தினர். சூழ்நிலையை பயன்படுத்திய தனியார் பஸ் உரிமையாளர்கள், டிக்கெட் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தினர்.
இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, பயணியரிடம் கொள்ளையடிக்க பஸ் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.
ஷிவமொகா, தாவணகெரே, பீதர், கலபுரகி, விஜயபுரா, ராய்ச்சூர், பல்லாரி, தார்வாட், உத்தரகன்னடா, ஹாவேரி, கொப்பால், பாகல்கோட், பெலகாவி, சிக்கோடி தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 7ல் நடக்கவுள்ளது.
வட மாவட்டங்களை சேர்ந்த, லட்சக்கணக்கான மக்கள் பெங்களூரில் வசிக்கின்றனர். ஓட்டு போடுவதற்காக, சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், பலர் நேற்று இரவே சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். மேலும் பலர் இன்று அல்லது செல்ல திட்டம் வகுத்து உள்ளனர்.
அதிக பணம் செலுத்தி டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். மனம் போனபடி டிக்கெட் கட்டணம் வசூலிக்கும், தனியார் பஸ்களுக்கு கடிவாளம் எப்போது என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.