தெலுங்கானாவுக்கு நீர் திறப்பு அரசு மீது விவசாயிகள் கோபம்
தெலுங்கானாவுக்கு நீர் திறப்பு அரசு மீது விவசாயிகள் கோபம்
ADDED : மே 16, 2024 04:37 AM
யாத்கிர், : பசவசாகர் அணையில் இருந்து தெலுங்கானாவுக்கு தண்ணீர் திறப்பதாக கூறி, கர்நாடகா அரசு மீது, யாத்கிர் மாவட்ட விவசாயிகள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
யாத்கிரின் ஹுன்சகி தாலுகா நாராயணபுரா கிராமத்தில், பசவசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 33.33 டி.எம்.சி., ஆகும். தற்போது 14 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்நிலையில் விவசாய பணிகளை மேற்கொள்ள, அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்படி, யாத்கிர் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, விவசாயிகள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
ஆனால் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி, தண்ணீர் திறக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் கடந்த 12 ம் தேதி இரவு முதல், அணையில் இருந்து 1.25 டி.எம்.சி., தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்த விவசாயிகள், நீர்பாசன அதிகாரிகளிடம் நேற்று, தகராறில் ஈடுபட்டனர்.
ராய்ச்சூரில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதாக, அதிகாரிகள் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த விவசாயிகள், தெலுங்கானாவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க தண்ணீர் திறப்பதாக குற்றச்சாட்டு கூறினர். தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு இருப்பதால் அங்கு தண்ணீர் திறந்து விட்டு, தங்கள் வயிற்றில் அடிப்பதாக, கர்நாடக அரசு மீது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
***