ஷட்டர் உடைந்த துங்கபத்ரா அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஷட்டர் உடைந்த துங்கபத்ரா அணை நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : செப் 05, 2024 03:59 AM

விஜயநகரா, : துங்கபத்ரா அணை மதகின் ஷட்டர் உடைந்ததால், 35 டி.எம்.சி., தண்ணீர் வீணாக வெளியேறியது. தொடர் மழையால், தற்போது நீர் வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில், துங்கபத்ரா அணை உள்ளது. அணையின் 19வது மதகின் ஷட்டரில், கடந்த மாதம் 12ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. நிரம்பி இருந்த அணையில் இருந்து, 35 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது. துங்கபத்ரா ஆற்றங்கரையோர விவசாயிகள் கடும் பாதிப்புக்குஉள்ளாகினர்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தற்காலிக ஷட்டர் பொருத்தப்பட்டது. அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. மீண்டும் மழை பெய்து, அணை நிரம்பாதா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், சில நாட்களாக அப்பகுதியிலும், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது.
துங்கபத்ரா அணையில், மொத்தம் 105.79 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்கலாம். இதில், நேற்றைய நிலவரப்படி 101.46 டி.எம்.சி., இருப்பு உள்ளது. அணைக்கு, வினாடிக்கு, 39,945 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, வினாடிக்கு, 15,533 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணை நிரம்புவதற்கு 4 டி.எம்.சி., நீர் மட்டுமே தேவைப்படுகிறது. தொடர் மழையால், அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
இதனால், கவலையில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தபடி இருப்பதால், 10 மதகுகளில் இருந்து, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
முன்னெச்சரிக்கையாக ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.