ADDED : ஏப் 25, 2024 02:13 AM

புதுடில்லி:பயிருக்கு உரிய விலை வழங்கக் கோரியும், நதிகளை இணைக்கக் கோரியும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள், புதுடில்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, ஒரு பெண் உட்பட சில விவசாயிகள் மரங்கள் மற்றும் மொபைல் போன் டவரில் ஏறினர்.
தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன் தினம் டில்லி வந்தனர். ஜந்தர் மந்தரில் நேற்று காலை திரண்டனர்.
பயிருக்கு உரிய விலை நிர்ணயம், நதிகள் இணைப்பு, வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் ஓய்வூதியம், காப்பீடு ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது சில விவசாயிகள் அங்கிருந்த மரம் மற்றும் மொபைல் போன் டவரில் ஏறி நின்று கோஷமிட்டனர்.
போலீசார், கிரேன் வாயிலாக விவசாயிகளை கீழே இறக்கினர். அதேபோல். மரத்தில் ஏறிய பெண் உட்பட சில விவசாயிகளையும் பத்திரமாக இறக்கி விட்டனர்.

