பெலகாவியில் விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்து பங்கேற்ற மடாதிபதிகள்
பெலகாவியில் விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்து பங்கேற்ற மடாதிபதிகள்
ADDED : ஏப் 03, 2024 07:36 AM
பெலகாவி : விவசாய கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெலகாவியில் நேற்று விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய, மாநில தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அக்கறை செலுத்தாமல், தேர்தலில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
இதற்கிடையில், பெலகாவி நகரின் சென்னம்மா சதுக்கத்தில், நேற்று விவசாயிகள் திரண்டனர். சிறிது நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அப்பகுதியின் மடாதிபதிகளும் வந்தனர்.
பேரணி
அங்கிருந்து, கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். அங்கு யாருமே எதிர்பார்க்காத அளவில், நேரம் கடக்க கடக்க விவசாயிகளின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்; உடனடியாக வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும்; கடபிரபா நதியில் இருந்து, கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்; கால்நடைகளுக்கு தீவனம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போலீசார் தடுப்புகள் அமைத்து, விவசாயிகளை தடுத்தனர். அதையும் மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால், போராட்டம் வெடித்தது. விவசாயிகள், போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடந்தது. தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டி.சி.பி., மீது கோபம்
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த டி.சி.பி., ரோகன் ஜெகதீஷ், விவசாயிகளை தள்ளினார். இதனால் ஆக்ரோஷம் அடைந்த விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
விவசாயிகள் போராட்டம், வேறு திசைநோக்கி செல்வதை அறிந்த பெலகாவி கலெக்டர் நிதீஷ் பாட்டீல், நேரில் வந்து, மனுவைப் பெற்றுக் கொண்டார். கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கும்படி கோரினர். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.
இதை ஏற்க மறுத்து, அங்கேயே மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும், கடபிரபா நதியில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதி அளித்தார்.
இதையடுத்து, போராட்டம் கை விடப்பட்டது. 'விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என, விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

