ADDED : செப் 06, 2024 05:51 AM
பெங்களூரு: விவசாயத்திற்கு கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல், விவசாயிகள் திண்டாடுகின்றனர். வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர்.
தாவணகெரே மாவட்ட விவசாயிகள், ஆண்டுக்கு இரண்டு முறை நெல் பயிரிடுகின்றனர். நல்ல மழை பெய்து அமோகமாக விளைகிறது. ஆனால் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையால், நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது உட்பட விவசாய பணிகளுக்கு பின்னடைவு ஏற்படுகிறது.
தாவணகெரே மாவட்டத்தில் ஆகஸ்ட் இறுதியில் நாற்று நடும் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் தொழிலாளர்கள் இல்லாத காரணத்தால், பயிரிடும் பணிகள் இன்னும் முடியவில்லை.
எனவே பீஹார், மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற, வட மாநிலங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். அவர்களும் நன்றாகவே பணியாற்றுகின்றனர்.
வட மாநிலங்களின், 200 தொழிலாளர்கள் நான்கு குழுக்களாக, தாவணகெரேவில் முகாமிட்டுள்ளனர். ஹரிஹராவின் நிட்டூர், மல்லநாயகனஹள்ளி, மலே பென்னுார் கிராமங்களில் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தினமும் குறைந்தபட்சம் எட்டு முதல் 10 ஏக்கர் நிலத்தில் நாற்று நடுகின்றனர். ஏஜென்டுகள் மூலம், அழைத்து வரப்படுகின்றனர். தினமும் 1,000 ரூபாய் கூலி பெறுகின்றனர்.
தாவணகெரே மட்டுமின்றி, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே விவசாயிகள் வட மாநிலங்களில் இருந்து கூலித் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர்.
ஒரு கிராமத்தில் நாற்று நட்டு முடித்த பின், வேறு கிராமங்களுக்குச் செல்கின்றனர். உணவுடன், நியாயமான கூலியும் கிடைப்பதால் விரும்பி வருகின்றனர். இவர்களில் பெண் தொழிலாளர்களும் அடங்குவர்.