பாகிஸ்தான் ஆதரவு பேச்சு சர்ச்சையில் பரூக் அப்துல்லா
பாகிஸ்தான் ஆதரவு பேச்சு சர்ச்சையில் பரூக் அப்துல்லா
ADDED : மே 06, 2024 11:59 PM
ஸ்ரீநகர்,
'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜம்மு - காாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு
சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது, 'பாகிஸ்தானில் தற்போதுள்ள நிலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாங்களாகவே, இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிப்பர்' என, குறிப்பிட்டார்.
நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முன்பும், தற்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்' என, கூறியிருந்தார்.
இது குறித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணையும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி அவர் கூறுவது உண்மையானால், இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கட்டும்; யார் அவரை தடுக்கின்றனர்.
அணு ஆயுதம்
ஆனால், ஒன்றை அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் கைகளில் வளையல் அணிந்திருக்கவில்லை. மேலும் அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அது நம் தலையில்தான் விழும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.