ADDED : மார் 09, 2025 11:37 PM
பெலகாவி: பெலகாவி, பைலஹொங்கலாவின், சிக்கநந்திஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நாகப்பா உள்ளாகட்டி, 63. இவருக்கு குருபசப்பா, 28, மஞ்சுநாத், 26, என்ற இரு மகன்கள் உள்ளனர்.
மது பழக்கம் கொண்ட மஞ்சுநாத், அதே கிராமத்தில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்தார். இவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்தார்.
ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மஞ்சுநாத் தன் முடிவில் உறுதியாக இருந்ததால், குடும்பத்தினர் அந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடத்தினர். திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்தது. வரும் 12ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. தம்பியின் திருமணத்தை காண, அண்ணன் குரு பசப்பா ராணுவத்தில் இருந்து, விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தகராறு செய்தார். இப்படி செய்தால் திருமணம் நடத்தமாட்டோம் என, குடும்பத்தினர் மிரட்டியும் பயன் இல்லை.
நேற்று முன்தினம் இரவு, மஞ்சுநாத் வழக்கம் போன்று, குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். அப்போது தந்தையும், அண்ணனும் புத்திமதி கூறியும் பொருட்படுத்தவில்லை.
பொறுமை இழந்த அண்ணனும், தந்தையும் கருங்கல் மற்றும் செங்கல்லால் மஞ்சுநாத்தின் மண்டையில் அடித்து கொலை செய்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த கித்துார் போலீசார், தந்தை, மகனை கைது செய்தனர்.