ADDED : ஆக 22, 2024 04:12 AM
கலபுரகி: திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் தந்தைக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் விதித்து, கலபுரகி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலபுரகி, சித்தாபூரைச் சேர்ந்தவர் சூரியகாந்த் காசி, 45. இவரது மகன் சதீஷ், 21. இவரும், 15 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கினர்.
சிறுமிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியிடம், சதீஷ் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். பின், சிறுமியிடம் இருந்து விலக ஆரம்பித்தார். நியாயம் கேட்க சதீஷ் வீட்டிற்கு சிறுமி சென்றுள்ளார்.
அங்கு சதீஷின் தந்தை சூரியகாந்த் காசி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மனம் உடைந்த சிறுமி தன் காதலன், அவரது தந்தை ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தார். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் கலபுரகி 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி யமனப்பா தீர்ப்பு கூறினார்.
சதீசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதமும், சூரியகாந்த் காசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.