எட்டு வயது மகளை சீரழித்த தந்தை ஜாமின் மனு: ஐகோர்ட் நிராகரிப்பு
எட்டு வயது மகளை சீரழித்த தந்தை ஜாமின் மனு: ஐகோர்ட் நிராகரிப்பு
ADDED : செப் 10, 2024 07:21 PM
புதுடில்லி:எட்டு வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
டில்லியில் வசிக்கும் ஒருவர் தன் எட்டு வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது மனைவியே போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், விசாரணை நீதிமன்றத்தில் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'குடும்பத் தகராறு காரணமாக என் மனைவி என் மீது பொய் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்' என கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம் சாட்டப்பட்டவர் சொந்த மகளையே கொடூரமான முறையில் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமின் வழங்கினால் அது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பது போல் ஆகி விடும். பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவே போக்சோ சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மனைவி பொய் புகார் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறுவதை ஏற்க முடியாது. ஒரு தாய் தனது மகளின் எதிர்காலம் பாதிக்கும் அளவுக்கு எந்தச் செயலையும் செய்ய மாட்டார்.
பாலியல் வன்கொடுமை குழந்தைகளுக்கு மன அதிர்ச்சியை ஏற்படுத்தும். அவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். இயல்பான சமூக வளர்ச்சியைத் தடுக்கும். குழந்தையின் மனநலம் மிகவும் முக்கியமானது. குழந்தைப் பருவ பாலியல் துஷ்பிரயோகததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்.
மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கும் பிரிவுகளில் இருக்கின்றன. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.