ADDED : மார் 27, 2024 07:25 AM

மாண்டியா : 'ஆப்பரேஷன் கை' மூலம், மாண்டியாவில் பா.ஜ., தலைவர்களை இழுப்பதற்கு காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், மாநில தலைவர் விஜயேந்திரா, நேற்று அவசர கூட்டம் நடத்தி, அறிவுரை கூறினார்.
கர்நாடக அரசியலில் மாண்டியா தொகுதி எப்போதுமே பரபரப்பாக பேசப்படும். தற்போதைய எம்.பி., சுமலதாவுக்கு, மாண்டியாவில் போட்டியிட பா.ஜ., வாய்ப்பு தருமா என்று ஒட்டுமொத்த மாநிலமே பேசியது. ஆனால், அந்த தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்துள்ள சுமலதா, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்க உள்ளார்.
இதற்கிடையில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாராயணகவுடா உட்பட சில தலைவர்களை, ஆப்பரேஷன் கை மூலம், தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சித்து வந்தது. இதையறிந்த மாநில தலைவர் விஜயேந்திரா, நேற்று அவசரமாக மாண்டியாவுக்கு சென்றார்.
முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, முன்னாள் அமைச்சர் நாராயணகவுடா உட்பட முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முக்கிய தலைவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
கூட்டத்தில், 'கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். உரிய நேரத்தில் தங்களுக்கு தகுந்த பதவி தரப்படும்.
எந்த ஆசைக்கும் பணிந்து, காங்கிரசுக்கு செல்ல வேண்டாம். தேவையின்றி கட்சி தாவி, அரசியல் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம்' என, விஜயேந்திரா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும், நாராயணகவுடா காங்கிரசுக்கு செல்வதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

