ADDED : மார் 31, 2024 05:40 AM

உடுப்பி ; போலீஸ் குடியிருப்பில் கணவருடன் வசித்த, பெண் கான்ஸ்டபிள் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி, 29. உடுப்பி காபு போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்தார். போலீஸ் குடியிருப்பில், கணவருடன் வசித்தார். குழந்தைகள் இல்லை.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், வீட்டிற்கு வந்தார். கணவர் ஹாலில் அமர்ந்து, டி.வி., பார்த்துக் கொண்டு இருந்தார். நேராக படுக்கை அறைக்குச் சென்ற ஜோதி, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
சந்தேகம் அடைந்த கணவர், அறை கதவை தட்டினார். ஜோதி கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த கணவர், காபு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று, ஜோதி உடலை மீட்டனர். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. குடும்ப தகராறா அல்லது வேறு காரணமா என்று, விசாரணை நடக்கிறது.

