57 தொகுதிகளில் 7ம் கட்ட தேர்தல்: 8.45 மணி நிலவரப்படி 59.45% ஓட்டுப்பதிவு
57 தொகுதிகளில் 7ம் கட்ட தேர்தல்: 8.45 மணி நிலவரப்படி 59.45% ஓட்டுப்பதிவு
UPDATED : ஜூன் 02, 2024 02:18 AM
ADDED : ஜூன் 01, 2024 02:02 AM

புதுடில்லி: 57 லோக்சபா தொகுதிகளில், இன்று(ஜூன் 01) இறுதி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. இரவு 8.45 மணி நிலவரப்படி, 59.45% ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
நாட்டின் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏழு கட்டங்களாக நடந்தது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
இதுவரை நடந்த ஆறு கட்ட தேர்தல்களில், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 485 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில், ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவற்றின் 57 லோக்சபா தொகுதிகளில், இன்று (ஜூன் 01) இறுதி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
இதன்படி, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 13; மேற்கு வங்கத்தில் ஒன்பது; பீஹாரில் எட்டு; ஒடிசாவில் ஆறு; ஹிமாச்சலில் -நான்கு; ஜார்க்கண்ட் மூன்று மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் தேர்தல் நடக்கிறது. மாலை 8.45 மணி நிலவரப்படி, 59.45% ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
மாநிலம் வாரியாக சதவீதம்
பஞ்சாப் -55.86 %
உ.பி., -55.6 %
மேற்கு வங்கம்-69.89 %
ஒடிசா - 63.57 %
சண்டிகர் - 62.8 %
ஹிமாச்சல பிரதேசம் - 67.67 %
ஜார்கண்ட் - 69.59 %
ஏழாம் கட்ட லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது தவிர, பீஹாரின் பாட்னா சாகிப் தொகுதியில் பா.ஜ.,வின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
இதேபோல் அக்கட்சி சார்பில் ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஹமீர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், மேற்கு வங்கத்தின் டைமண்ட் துறைமுகம் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
இன்று நடக்கவுள்ள தேர்தலில், 10.06 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 1.09 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஏழு கட்ட தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் அனைத்தும், ஜூன் 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.