ஜார்க்கண்ட் அமைச்சர் தொடர்புடைய இடத்தில். பணக்குவியல்!
ஜார்க்கண்ட் அமைச்சர் தொடர்புடைய இடத்தில். பணக்குவியல்!
ADDED : மே 06, 2024 11:58 PM

ராஞ்சி : ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனி செயலரின் உதவியாளரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று நடத்திய சோதனையில், குவியல் குவியலாக ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதன் மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகி றது.
ஜார்க்கண்டில், முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திரா கே.ராம், வருமானத்துக்கு அதிகமாக 100 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறையினர், வீரேந்திராவை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தனர்.
அதிர்ச்சி
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, பென் டிரைவ்வை ஆய்வு செய்த போது, ஜார்க்கண்ட் மாநில அரசியல்வாதிகளுடன் நடந்த பணப்பரிமாற்ற தகவல்கள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஆலம்கிர் ஆலமின் தனி செயலர் சஞ்சிவ் லால் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து சஞ்சிவ் லாலின் வேலைக்காரரின் வீட்டில் இருந்த ஒரு அறையில் குவியல் குவியலாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலைகளை போல குவித்து வைக்கப்பட்டு இருந்த கரன்சிகளை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு, ஆறு மிஷின்கள் வரவழைக்கப்பட்டு, 12 மணி நேரமாக தொடர்ந்து எண்ணப்பட்டது. இதுவரை எண்ணப்பட்ட பணம், 30 கோடியை தொட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் ஆலம்கிர் ஆலம் கூறியதாவது:
'டிவி' யை பார்த்து தான் தகவலை தெரிந்து கொண்டேன். என் தனி செயலர் சஞ்சிவ் லால் வீடு என, கூறப்படுகிறது. அவர் ஒரு அரசு அதிகாரி. எனக்காக அரசால் நியமிக்கப்பட்ட தனி செயலர். அதற்கு முன் இரு முன்னாள் அமைச்சர்களின் செயலராக அவர் இருந்துள்ளார்.
பரபரப்பு
அனுபவத்தின் அடிப்படையிலேயே தனி செயலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமலாக்கத்துறை விசாரணை முடிவடையும் முன் சோதனை குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ேஹமந்த் சோரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனால், முதல்வர் பதவியை அவர் இழக்க வேண்டியிருந்தது. தற்போது ஜார்க்கண்ட் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் பண குவியல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
தங்களை அமலாக்கத்துறை துன்புறுத்துவதாகவும், குறிவைத்து சிக்க வைப்பதாகவும், 'இண்டியா' கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். தற்போது ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் தொடர்புடைய இடத்தில் மலை போல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் என்ன பதில் சொல்லப் போகின்றனர். தற்போது ஜார்க்கண்டின் நிழல் முதல்வராக செயல்படும் கல்பனா சோரனின் பதில் என்ன? அமைச்சர் ஆலம்கிரை, உடனடியாக பதவியில் இருந்து நீக்குவீர்களா.
பாபுலால் மராண்டி
ஜார்க்கண்ட் பா.ஜ., தலைவர்