'மொபைல்' செயலி வாயிலாக நிதி மோசடி தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் ரெய்டு
'மொபைல்' செயலி வாயிலாக நிதி மோசடி தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் ரெய்டு
ADDED : மே 02, 2024 01:13 AM
புதுடில்லி,: இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பொது மக்களிடம் இருந்து, 'மொபைல் போன்' செயலி வாயிலாக நிதி திரட்டி மோசடி செய்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
டில்லியைச் சேர்ந்த 'ஷிகோ டெக்னாலஜி' மற்றும் 'லில்லியன் டெக்னோகேப்' ஆகிய இரு தனியார் நிறுவனங்கள், 'எச்.பி.இசட்., டோக்கன்' செயலியை நடத்தி வந்தன.
இந்த செயலியில், 'கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்களை தேடி எடுப்பதற்கான கருவிகளுக்கு வாடகை செலுத்தினால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி நாணயங்கள் பெற்று தரப்படும்' என அறிவித்தனர்.
இதை நம்பி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்தனர். ஒரு சில மாதங்கள் மட்டும் முதலீட்டுக்கான லாபம் என்ற பெயரில் சிறு தொகையை தந்தவர்கள், அதன் பின் எந்த பணத்தையும் முதலீட்டாளர்களுக்கு செலுத்தவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் போலீசில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் பல மாநில சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் கண்டறியப்பட்டதால், அமலாக்கத் துறையும் வழக்கை விசாரிக்கிறது.
இந்நிலையில், ஷிகோ டெக்னாலஜி மற்றும் லில்லியன் டெக்னோகேப் நிறுவனங்களின் இயக்குனர்கள் மீது சி.பி.ஐ.,யும் சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து டில்லி, உத்தர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 10 மாநிலங்களில், இந்த நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் நேற்று சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கை:
இந்த சோதனையில் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள், ஏ.டி.எம்., அட்டைகள், மின்னஞ்சல்களில் பதிவாகியுள்ள தகவல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 150 வங்கிக் கணக்குகள் வாயிலாக மக்களிடம் இருந்து நிதி திரட்டி உள்ளனர்.
பின், அந்த பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் ஹவாலா முறையில் வெளிநாட்டுக்கு மாற்றியுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

