வடிகால் துார்வாரும் பணிகள் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி நிறுத்தம்
வடிகால் துார்வாரும் பணிகள் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி நிறுத்தம்
ADDED : ஜூலை 31, 2024 10:07 PM
விக்ரம்நகர்:வடிகால் துார்வரும் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்க வேண்டாமென, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தலைமைச் செயலர் நரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
டில்லியின் பல்வேறு இடங்களில், கடந்த மாசம் 27ல் பலத்த மழை பெய்தது. பழைய ராஜேந்திர நகரில் செயல்பட்ட பிரபலமான, ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையக் கட்டடத்தின் கீழ் தரைதளத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதில், இரு மாணவியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ் பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் கமிஷன், விதிகளை மீறி இயங்கும் பயிற்சி மையங்கள் குறித்த விபரங்களை அளிக்கும்படியும், டில்லி தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜுக்கு தலைமைச் செயலர் நரேஷ்குமார் எழுதிய கடிதம்:
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து , வடிகால் துார்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை நடத்தும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மே 27ல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்யும்படி நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு தணிக்கை மூலம் முறையாக சரிபார்க்கப்படாத வரை, வடிகால்களை துார்வாரும் பணியில் ஈடுபட்ட எந்தவொரு ஒப்பந்தக்காரருக்கும் நிதி வழங்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.